ஆதரவற்றோர்களுக்கு உதவிய நெல்லை மாநகர துணை ஆணையர் ஶ்ரீனிவாசன் மற்றும் லயன்ஸ் சங்க தலைவர் மணிகண்டன்...

பரட்டை தலை ,அழுக்கு உடல், கிழிந்த ஆடைகள் எல்லாம் மாறி புத்தம் புதிய மனிதர்களாய் மாறிய ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள்.

கரொனா தொற்று முழு ஊரடங்குக்கு  முன் நம்மை பற்றிய சிந்தனைகள் கூட இன்றி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சக மனிதனை  காப்பாற்ற அல்ல கண்டுகொள்ள கூட  நேரம் இல்லாத நிலையில்  வெகு பரபரப்பாய் இயங்கிய நம்மை, அத்தனை பரபரப்புகளுக்கும் முற்று புள்ளி வைத்து சற்றே சக மனிதர்களின் மீதும் அக்கறை கொள்ள வைத்தது கூட கொரானா என்ற கொடிய நோயின் மற்றொரு சாதனை எனலாம்.

முழு ஊரடங்கு  அமலில் உள்ள நிலையில் நெல்லையில்  யாருடைய ஆதரவுமின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களை மீட்டு  மாநகராட்சி சார்பாக கல்லணை பள்ளியில் வைத்து பராமரித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

உணவுகளோடு நிறுத்தி விடாமல் இவர்களது பரிதாப நிலையை கண்டு மனமிறங்கிய தன்னார்வல அமைப்புகள் களத்தில் இறங்கியதன் விளைவாக இன்று மனநோயாளிகளும் , ஆதரவற்றவர்களும், முதியவர்களும் புதிய மனிதர்களாக காட்சியளிக்கிறார்கள்.

கல்லணை பள்ளியில் முதலில் அனைவருக்கும் முடி திருத்தம் செய்தது சோயா என்ற அமைப்பு . பின்னர் அவர்கள் உயிரை காக்கும் விதமாக  கொரானா தொற்று பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாநகர காவல்துறையுடன் கரம் கோர்த்து இறங்கிய ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம். தொடர்ந்து உணவுகள் வழங்கியது மட்டுமல்லாமல் நேற்று அவர்களுக்கு தேவையான ஆடைகள், உள்ளாடைகள், படுத்து உறங்க போர்வைகள், துண்டுகள் என  சோப்பு, பேஸ்ட் , பிரஷ் என அனைத்து பொருட்களையும் வழங்கி நெகிழ வைத்துள்ளது. இவற்றை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் மற்றும் காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார் ஆகியோர் வழங்கினர்.

காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் அங்கிருந்த மூதாட்டி ஒருவருடன் பரிவுடன் விசாரித்து உணவருந்த செய்ததும் அனைவரது மனதையும் தொட்டது.

மேலும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க புதிய பாத்திரங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் இராமேஸ்வரி, லயன்ஸ் சங்க பட்டைய தலைவர், லயன் R மணிகண்டன், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

போலி அந்தஸ்து, கவுரவம் என சொந்த உறவுகளை கூட கண்டுகொள்ளாத இந்த காலகட்டங்களில் தெருவில் சுற்றி திரிபவர்கள் மீது எவ்வித எதிர்பார்ப்புமின்றி கருணையுடன் அனுகும் தன்னார்வல அமைப்புகளின் பணி பாராட்டுக்குரியது.