பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்த உதவி ஆணையர் சதீஷ்குமார்...

பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்த உதவி ஆணையர் சதீஷ்குமார்...

இது தூய்மை நெல்லை

ஜாதிகள் இல்லையடி பாப்பா
பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்த உதவி ஆணையர் சதீஷ்குமார்.

ஜாதி, மதம், அரசியல், சினிமா  என எந்த விளம்பரங்களும் இல்லாமல் விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் பொது சுவர்கள் அனைத்தும் வண்ணமயங்களாக அழகாக காட்சியளிக்கிறது நெல்லை மாநகரம்.

பொது சுவர்களை நாசமாக்கும்  அத்தனை விளம்பரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து  ஓவியங்கள் மூலம் நெல்லையின் பராம்பரியத்தை வெளிஉலகிற்க்கு அற்புதமாக  காட்டியுள்ளார் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார்.

நெல்லை என்றாலே சட்டென்று பற்றி கொள்ளும் ஜாதி நெருப்பு  பொது சுவற்றில் விளம்பரங்களின் மூலம் அதை பற்ற வைக்கும் ஜாதிய அமைப்புகள்  தங்கள் ஜாதி தலைவர்களின் பிறந்த நாள் விழா, அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், மத பிரசாரங்கள், போஸ்டர்கள்  என பொது சுவர்களை நாசமாக்கிய அனைத்திற்க்கும் முடிவு கட்டி  சுவர்களில் இனி   ஜாதிகள்  இல்லையடி பாப்பா என உறுதி பட கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற  தேர்தலில் சுவர் விளம்பரங்கள், ஜாதி தலைவர்களின் சிலைகளை மறைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்ட நிலையில்  அனைத்து சுவர்களும் வெள்ளையடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலையில் அவற்றை பாதுகாக்க நினைத்த உதவி ஆணையர் சதீஷ்குமார் மிக வேகமாக செயல்பட்டு தன்னார்வல அமைப்புகள் மற்றும்  ஓவியர் சங்கத்துடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள், முன்கள பணியாளர்களை பெருமை படுத்தும் விதமான ஓவியங்கள், தலைகவசம் குறித்த விழிப்புணர்வு, சுற்று சூழல், நெல்லையின் பராம்பரியத்தை சொல்லும் ஓவியங்கள்  என அனைத்து சுவர்களிலும் வரைந்து அழகான ஓவிய நகரமாக நெல்லை மாநகரை மாற்றி காட்டி அசத்தியுள்ளார்.

வரையப்பட்ட ஓவியங்களை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தனது தனிப்பட்ட பெரும் முயற்சியின் மூலம் ஓவியங்கள்  வரைய செய்து அதன் மூலம் அமைதியை நிலவ செய்த  உதவி ஆணையர் சதீஷ்குமாருக்கு வலை தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.