டி எஸ் பிக்கும் ஆய்வாளருக்கும் ஈகோ சண்டை...
காவல் நிலையத்தில் நடந்த ஈகோ சண்டை!
காவல்நிலைய பொது குறிப்பேட்டில் மாற்றி மாற்றி குற்றச்சாட்டு
காவல் நிலைய பொது குறிப்பேடு இணைய தளங்களில் வெளியானது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் துணைகாவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் ரெகுராஜன் பணியில் இல்லை என்றும், அவர் அங்கு சரிவர காவல் பணிகளை மேற்கொள்வது இல்லை என்றும் குற்றச்சாட்டி காவல் நிலைய பொதுக் குறிப்பேட்டில் எழுதி வைத்து விட்டுச் சென்றார்.
அதற்கு பதிலடியாக காவல் ஆய்வாளர் ரெகுராஜன் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு காவல் நிலையத்தில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. அந்த குறிப்பேட்டில், காலை 6:50க்கு பணிக்கு வந்த தன்னை 7:15 மணிக்கு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க அறிவுறுத்தி வெளியே அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், புறக்காவல் நிலையம் கட்டுவதற்கு ஸ்பான்சர்களை பிடிக்க சொல்லி தொல்லை செய்வதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார் காவல் ஆய்வாளர் ரெகுராஜன்.
டிஎஸ்பியின் டார்ச்சரால் மனதளவில் கடுமையாக பாதிகப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் சிகிச்சைக்கு செல்வதாகவும் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு ரெகுராஜன் சென்றுவிட்ட சம்பவத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால் காவல் நிலையத்தை விட்டு சென்ற காவல் ஆய்வாளர் ரெகுராஜன், வீட்டுக்கும் செல்லவில்லை மருத்துவமனைக்கும் செல்லவில்லை எங்கு சென்றார் என்பது தெரியாமல், அவரை குடும்பத்தினர் தேடிவருகின்றனர்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் இவர்களே ஒருவரை ஒருவர் பழிவாங்க பணி செய்து வருவது வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இவை எல்லாவற்றையும் விட காவல் நிலைய பொது குறிப்புகள் இணையதளங்களில் வெளியானது எப்படி ? என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது
உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்


Comments (0)
Facebook Comments (0)